நாகலாந்து, அருணாச்சலபிரதேசத்தில் ஆயுதப்படைகள் சிறப்பு அதிகார சட்டம்... 6 மாதங்களுக்கு நீட்டிப்பு...

Extension of Armed Forces Special Powers Act for next 6 months from 1st April

Mar 28, 2024 - 13:53
நாகலாந்து, அருணாச்சலபிரதேசத்தில் ஆயுதப்படைகள் சிறப்பு அதிகார சட்டம்... 6 மாதங்களுக்கு நீட்டிப்பு...

நாகலாந்து மற்றும் அருணாச்சலப்பிரதேசத்தில் ஆயுதப்படை சிறப்பு சட்டத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

1958-ம் ஆண்டின் ஆயுதப்படைகள் சிறப்பு அதிகார சட்டத்தின் பிரிவு 3-ல் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி இந்தியாவின் எல்லை பகுதியில் உள்ள மாநிலங்களான நாகலாந்து, அருணாச்சலப் பிரதேசத்தில் எல்லையில் உள்ள மாவட்டங்கள் பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ள பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஆயுதப் படைகள் மற்றும் மத்திய ஆயுதப் போலீஸ் படைகள் அச்சுறுத்தலான நபரையும், சட்டத்தை மீறுபவர்களையும் சுட்டுக் கொல்லவும், வாரண்ட் இன்றி சோதனையிடவும், கைது செய்யவும், மத்திய அரசின் அனுமதியின்றி வழக்குத் தொடரவும் இந்த சட்டம் அதிகாரம் அளிக்கிறது.

கடந்த மார்ச் 24, 2023 அன்று மத்திய உள்துறை அமைச்சகம், நாகலாந்து மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள திராப், சங்லாங் மற்றும் லாங்டிங் மாவட்டங்களையும், நம்சாய், மகாதேவ்பூர் மற்றும் சவுகாம் காவல் நிலையங்களின் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ஆயுதப்படைகள் சிறப்பு அதிகார சட்டம் அமல்படுத்தப்பட்டது.

இது வரும் 31 ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், ஏப்ரல் 1 ஆம் தேதி  முதல் அடுத்த 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள திராப், சங்லாங் மற்றும் லாங்டிங் மாவட்டங்களும், அஸ்ஸாம் மாநிலத்தின் எல்லையான அருணாச்சலப் பிரதேசத்தின் நம்சாய் மாவட்டத்தில் உள்ள நம்சாய், மகாதேவ்பூர் மற்றும் சௌகாம் காவல் நிலையங்களின் எல்லைக்குள் வரும் பகுதிகளும் இந்தப் பிரிவின் கீழ் அச்சுறுத்தல் மிகுந்த பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதேபோல் நாகலாந்தில் 8 மாவட்டங்களில் உள்ள 20 காவல்நிலைய சரகங்களிலும் இந்த சட்டம் கால நீடிப்பு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow